* படி எடுக்கும் பணியில் தொல்லியல் துறை
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் புதிய பஸ்நிலையம் அருகே, சிதைந்த நிலையில் கிடந்த 800 ஆண்டு பழமை வாய்ந்த பறவை அன்னம் காத்தார் கோயில் கல்வெட்டு குறித்து, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையமும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு படி எடுத்தனர்.
இது குறித்து பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையச் செயலர், தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறியதாவது: சுமார் 800 ஆண்டுகளுக்கு முன், பாண்டியர்களால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் இடிந்த நிலையில், கருவறை மட்டும் பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் கற்கள் மற்றும் தூண்கள் பூமிக்கு கீழே புதைந்து கிடந்தன.இதை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, கோயில் இடிபாடுகளில் கிடந்துள்ள கற்களை ஜேசிபி மூலமாக பூமியிலிருந்து வெளியே தோண்டி எடுத்து, கோவில் நிர்வாக குழு தலைவர் வெள்ளத்துரை மற்றும் உறுப்பினர்களால் வரிசைப்படுத்தி உள்ளனர்.
பெரிய கோயிலுக்கான தடயம்:
இவற்றின் மூலம் பழமையான கோயில், கட்டிடக்கற்கள் மற்றும் தூண்கள் மூலம் பெரிய கோவில் இருந்ததன் தடயங்கள் காணப்படுகின்றன. வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்வெட்டை கண்டறிந்து சுத்தம் செய்யும் முறை, கல்வெட்டுகளை அதற்குண்டான உபகரணங்கள் மூலம், படி எடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயக்குமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரால் பயிற்சி அளிக்கப்பட்டது.
25 கல்வெட்டுகள் படி எடுப்பு:
இங்கு 25க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டன. இன்னும் சில கல்வெட்டுகள் படி எடுக்க வேண்டி உள்ளதால், கோயிலில் உள்ள அனைத்து கல்வெட்டுகளையும், ஒருங்கிணைத்து அதில் உள்ள செய்தியை வெளிக்கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு உள்ளேயும், கோவில் கட்டுமானத்தின் வெளிப்புறமும், சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. துண்டு, துண்டான கல்வெட்டுகளாக இருப்பதால், செய்தியை முழுமையாக அறிய முடியவில்லை.
கிடைத்த ஒரு சில கல்வெட்டுகள் மூலம் முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகிறது’ என்று கூறினார். இந்நிகழ்வில் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ரமேஷ்குமார், ஜெகந்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் வெள்ளத்துரை மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
பழைய வரலாற்றை அறிய வாய்ப்பு:
ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது: மிகப் பழமையான இக்கோவில் பகுதியை வெண்பைக்குடி நாட்டு கருங்குளமான சாதவாசகநல்லூர் என்று அழைக்கப்பட்ட குறிப்புகள் இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. கல்வெட்டை படியெடுக்கும் பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், கல்வெட்டைப் படித்து அவற்றைப் பற்றிய விளக்க உரை மூலம், அந்த வட்டாரத்தினுடைய வரலாற்றுத் தொடர்ச்சியை அறிய முடியும்.
இப்பகுதியில் உள்ள மாயூரநாதசுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில் மற்றும் சோழபுரம் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம், நமது பகுதியின் பழங்கால வரலாற்றை அறிய முடிகிறது. எனவே, மாணவர்கள் கல்வெட்டுகள் மூலம் பல ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.