அயோத்தி ராமர் கோயிலில் சிலை: வெளியான தகவல்!

உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது.

நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு நடைபெறும் கோயிலின் கட்டுமானப் பணிகள் வருகிற 2024ஆம் ஆண்டுதான் முழுமையாக நிறைவடையும். அதேசமயம், தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள கோயிலில் இருந்து ராமர், சீதா, லட்சுமணர் சிலைகள் புதிய கோயிலின் கர்பகிரகத்தில் 2023ஆம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் கூறுகையில், “ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் 2 ஷிப்ட்களில் பணிபுரிந்து வருகின்றனர். கோயிலின் முதல் தளப் பணிகள் 2023 ஆம் ஆண்டில் முடிவடையும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “வருகிற டிசம்பர் மாதம் மற்றும் 2024ஆம் ஆண்டு மகர சங்கராந்திக்கு இடையே கோயிலில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். அடுத்த ஜனவரி 1 அல்லது ஜனவரி 14ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும். கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை முடிந்ததும் பக்தர்களுக்காக திறக்கப்படும். தற்போதைய நிலவரப்படி, கோயிலில் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், கோயிலில் 1949ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும், மிக பிரம்மாண்ட ராமர் சிலை ஒன்று என மொத்தம் இரண்டு சிலைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் சூரிய ஒளி ராமர் சிலையின் நெற்றியில் திலகம் இடுவது போல பிரதிஷ்டை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.