புதுடெல்லி: முன்னாள் ராணுவத்தினர் தினம் ஜனவரி14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது முதல் முறை யாக கடந்த 2016-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. கடந்த 1953-ம்ஆண்டு ஜனவரி 14-ம் தேதிதான், இந்திய ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா ஓய்வு பெற்றார். இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ராணுவத்தினர் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இந்தாண்டு 7-வது முன்னாள் ராணுவத்தினர் தினத்தை டெல்லி, டேராடூன், சென்னை, சண்டிகர், புவனேஸ்வர், ஜூஹுன்ஜுனு, ஜலந்தர், பனாகர், மற்றும் மும்பை ஆகிய 9 இடங்களில் கொண்டாட முப்படைகளின் தலைமையகம் முடிவு செய்தது.
டெல்லியில் மானெக்க்ஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படை தளபதி அட்மிரல் ஹரி குமார், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பேசுகையில், ‘‘இந்திய பாதுகாப்பு படைகள் அதிக திறன் வாய்ந்ததாகவும் உலகில் மிக சிறந்ததாகவும் உள்ளன. இதற்கு முன்னாள் ராணுவத்தினரின் வெல்லமுடியாத தைரியம் மற்றும் தியாகங்கள்தான் காரணம். இந்த உத்வேகத்தால், எந்த சவாலையும் சந்திக்கும் வலிமை மிக்க படையாக நமது முப்படைகளும் உள்ளன. அனைவருக்கும், மகர சங்கராந்தி, பொங்கல் மற்றும் பிஹூ வாழ்த்துகள்’’ என்றார்.
கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் பேசுகையில், ‘‘நாட்டுக் காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நமது தீரமிக்க வீரர்களை நாம் இன்று நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்கிறோம். முன்னாள் ராணுவத்தினரின் பாரம் பரியத்தை முன்னெடுத்து செல்ல இந்திய கடற்படை பாடுபடும்’’ என்றார்.
விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்திரி பேசுகையில், ‘‘முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள். உங்கள் நலனில் விமானப்படை முழு அர்பணிப்புடன் உள்ளது. சேவை செய்பவர்களுக்கு சேவை செய்தல் என்ற பழமொழிதான் எங்களுக்கு தாராகமந்திரமாக இருக்கும். நாட்டின் முன்னேற்றத்துக்காக, நமது முன்னாள் ராணுவத்தினர், பல துறைகளில் மதிப்பு மிக்க பங்களிப்பை அளித்துள்ளது பெரு மையாக உள்ளது’’ என்றார்.
பீஷ்மருக்கு நிகரானவர்கள்: ராஜ்நாத் சிங் பாராட்டு
உத்தரகாண்ட் டேராடூனில் நடந்த முன்னாள் ராணுவத்தினர் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கலந்து கொண்டு புகழாரம் சூட்டினர். இந்நிகழச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘ இந்திய புராணத்தில் பீஷ்ம பிதாமகர் போன்ற வீரர் யாரும் இல்லை. அவர் இரும்பு போன்ற மன உறுதியுடன் வாழ்ந்தார். யாராவது மிகப் பெரிய சபதம் எடுத்துக்கொண்டால், அவரை பீஷ்மருடன் ஒப்பிடுவது வழக்கம். உறுதியுடன் வாழ்வதில், நமது வீரர்கள் பீஷ்மருக்கு நிகரானவர்கள்’’ என்றார்.