கையில காசு.. வாயில தட்டு; திமுகவினருக்கு ஸ்டாலின் பரிசு!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வண்ணக் கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொம்பு செடியை கட்டி மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பொங்கி வரும் போது, ‘பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்’ என்று கூறி, மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாததால் களைகட்டியுள்ளது.

பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது,
திமுக
தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துத் தொண்டர்கள் வாழ்த்து பெறுவதை வழக்கமாக செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் திருநாளான இன்று, தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொண்டர்கள் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு வந்தனர்.

இவ்வாறு வருகை தந்து இருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளிடம் பொங்கல் வாழ்த்துக்களை பெற்ற முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு வழக்கம்போல் ரூ.100 பரிசாக வழங்கினார்.

அப்போது பொங்கல் வாழ்த்து தெரிவிக்க வந்த திமுக தொண்டர்கள் கையில் ரூ.100 பணத்தை கொடுத்து செல்லமாக கன்னத்தில் தட்டி பதிலுக்கு வாழ்த்து கூறிய முதல்வரை பார்த்து கட்சியினர் நெகிழ்ந்து போயினர்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்தபோது இதே போல திமுக தொண்டர்கள் அவருக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து 100 ரூபாய் பரிசாக பெற்று செல்வதை வழக்கமாக செய்து வந்தனர்.

இவ்வாறு பெறும் பணத்தை தொண்டர்கள் யாரும் செலவு செய்யமாட்டார்கள். தனது தலைவரிடம் வாங்கிய பணம் என்பதால் பலர் அந்த பணத்தை நினைவுக்காக பத்திரமாக வைத்து இருப்பார்கள்.

இன்னும் சிலரது வீடுகளில் தலைவர் கையால் பெற்ற பணம் என்பதால் அதை ஃப்ரேம் போட்டு கூட வைத்து இருப்பார்கள். அந்தவகையில் கருணாநிதி பாணியில் தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கி இருப்பது, கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.