திருவனந்தபுரம்: இலங்கை அணிக்கு எதிரான 3 வது போட்டியில் இந்திய அணி 317 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. இந்தியாவின் விராட் கோஹ்லி 166 ரன்னும், சுப்மன் கில் 116 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ‛டுவென்டி-20′ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டுவென்டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று (ஜன.,15) திருவனந்தபுரத்தில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது. இதில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. கருணரத்னே பந்துவீச்சில் ரோகித் 42 ரன்னில் வெளியேறினார். பின்னர் கில் உடன் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிலைத்து நின்று ஆடிய சுப்மன் கில் சதம் கடந்து 116 ரன்னில் அவுட்டானார். கோஹ்லியும் தன் பங்கிற்கு சதம் கடத்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் (38), லோகேஷ் ராகுல் (7), சூர்யகுமார் (4) சிறிய இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி கடைசி ஓவரில் 150 ரன்களை கடந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்தது. விராட் கோஹ்லி 110 பந்துகளுக்கு 166 ரன்களுடனும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), அக்சர் படேல் 2 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் ரஜிதா, லஹிரு குமாரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 391 ரன்கள் என்ற கடின இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 22 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 317 ரன்னில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது. இந்திய தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement