தை பொறந்தாச்சு…களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்..! பொங்கல் வைக்கும் முறை இதுதான்

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் ஆண்டுதோறும் தை 1 ஆம் தேதி ஆரவாரத்துடன் தொடங்கும். அதேபோல் இந்த ஆண்டு பொங்கலும் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரு மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. வீடுகள் தோறும் இரவு முழுவதும் விழித்திருந்த பெண்கள், வாசலில் பொங்கல் பானை கொண்ட அழகழகான கோலங்களை போட்டு, அவற்றுக்கு விதவிதமான கலர்களை கொடுத்து வாசலை விழாக்கோலமாக மாற்றினர். 

இதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்து அதிகாலை முதலே வாசல் பொங்கல் வைத்தும் வருகின்றனர். விவசாயத்துக்கு உதவும் முழுமுதற் கடவுளான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் விழாவுக்கு, புதுப்பானையில் பச்சரிசியிட்டு, மஞ்சள் கோப்பு, கரும்பு ஆகியவற்றை வைத்து பொங்கல் வைத்து வருகின்றனர். 

பொங்கல் கொண்டாடுவது எப்படி?

பொங்கல் பானையைக் கிழக்கு நோக்கி வைத்து, அதை மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்துகள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். பிறகு அடுப்பில் ஏற்றிப் பொங்கல் வைக்க வேண்டும். பிறகு புத்தரிசியை இட்டுப் பொங்கலிட வேண்டும். பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றும் முன்பாக வெல்லம் அல்லது மஞ்சளில் விநாயகரைப் பிடித்துவைத்து அதற்கு மலர் சமர்ப்பித்து, ‘நல்ல முறையில் பொங்கல் வழிபாடு நிகழ வேண்டும்’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

வீட்டின் வாசலில் அடுப்பு மூட்டிப் பொங்கல் செய்வது வழக்கம். தற்போது பல வீடுகளில் வீட்டுக்கு உள்ளே கேஸ் ஸ்டவில் பொங்கல் வைத்துவிடுகின்றனர். அப்படியே பொங்கல் செய்தாலும் சூரியனுக்கு வீட்டுக்கு வெளியில் சூரிய ஒளி விழும் இடத்தில்தான் படையல் போட வேண்டும். படையில் இடும் இடத்திலும் சூரிய சந்திரர்களை வரைந்து ( வடக்குப் பக்கம் சூரியன், தெற்குப் பக்கம் சந்திரன்) அந்த இடத்தில்தான் பொங்கல் பானையை வைத்து வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்குள் சென்று வழக்கமான நம் பூஜை அறையில் அதே பொங்கல் பானையை வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். இந்த நாளில் குறைந்தது 11 முறையாவது சூரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டியது அவசியம்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்

காலை 7.30 மணி முதல் 8.30க்குள் பொங்கல் வைத்து வழிபடலாம். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் 7 மணி முதல் 8 மணி வரை சுக்கிர ஹோரை. 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஹோரை. எனவே இந்த இரண்டு ஹோரைகளும் சேர்ந்தார்ப்போல 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பொங்கல் வைத்தால் சுக்கிரனின் அருளால் சுகமான வாழ்வும், புதபகவானின் அருளால் அறிவுப் பெருக்கமும் உண்டாகும். அதேபோன்று பகல் 11 மணி முதல் – 12 மணி வரை குருஹோரையிலும் பொங்கல் வைத்து வழிபடலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.