பனை மரங்கள் வீழ்த்தப்படுவதை தடுக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான்
வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் இராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் பனை மரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் தேசிய மரமான பனைமரங்கள் சுயநலமிகளால் வெட்டப்படுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்ப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

வறட்சி மிகுந்த தென்மாவட்டங்களில் ஏழை எளிய மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவது பனைமரங்களாகும். குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பனைமரங்களை நம்பியே இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நீர் தேவையின்றியே, மரத்தின் அனைத்து பாகங்களாலும் பல ஆண்டுகள் நீடித்த பயன்தரும் பனைமரங்களே தென்தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த அளவிற்கு சூழலியல் மற்றும் பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த பனைமரங்களை அற்ப காரணங்களுக்காக வரிசையாக வெட்டி வீழ்த்தப்படும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க செய்கின்றன.

தமிழ்நாட்டின் தேசிய மரமான பனையை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அரசு விதி இருக்கும் நிலையில் செம்மண் பூமியான இராமநாதபுரம் மாவட்டம், சிறைக்குளம் ஊராட்சியில் புதுநகர், காமராசபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த ஏராளமான பனைமரங்கள் தனியார் சூரியஒளி மின் நிலையம் அமைப்பதற்காக எவ்வித அனுமதியும் இன்றி அழிக்கப்படுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இதனைத் தடுப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பனை மரங்களை வளர்ப்பதற்காக பெயரளவில் திட்டங்களை அறிவித்துள்ள திமுக அரசு, இருக்கும் பனை மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்காமல் வேடிக்கைப்பார்ப்பது ஏன்? இதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா? புதிதாகப் பனை மரங்களை வளர்க்காவிட்டாலும் இருக்கும் பனைமரங்களை அழிக்காமல் காக்க வேண்டியது ஆளும் அரசுகளின் கடமையும், பொறுப்புமாகும்.

ஆகவே, இனியும் பனைமரங்கள் வீணாக வெட்டி வீழ்த்தப்படுவதை அனுமதியாது, தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.