நேபாளத்தில், 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில், ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 68 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எட்டி ஏர்லைன்ஸின் (Yeti Airlines) ஏ.டி.ஆர்-72 விமானம், நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 68 பயணிகள், 4 பணியாளர்கள் என 72 பேரை ஏற்றிக்கொண்டு இன்று காலை 10:33 மணியளவில் புறப்பட்டிருக்கிறது.

விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில், பொக்ரா விமான நிலையத்துக்கு அருகே பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. விமானத்திலிருந்த பயணிகள் குறித்து வெளியான தகவலின்படி, 6 குழந்தைகள்,15 வெளிநாட்டவர்கள் இருந்ததாகவும், அதில் 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், 2 கொரியர்கள், அர்ஜென்டினா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸைச் சேர்ந்த தலா ஒருவர் மற்றும் 53 நேபாள நாட்டினர் என மொத்தம் 68 பயணிகள் விமானத்தில் பயணித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் இதுவரை ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விபத்து நடந்த உடனேயே அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டிய நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் எனும் பிரசந்தா, இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “நேபாளத்தில் நடந்த சோகமான விமான விபத்தில் பலர் உயிரிழந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் இருக்கின்றன” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.