மதுரை எய்ம்ஸ் பணிகளை துவக்க தோப்பூரில் ரூ.2.16 கோடியில் தற்காலிக நிர்வாக அலுவலகம்

திருப்பரங்குன்றம்:  மதுரை எய்ம்ஸ் தற்காலிக நிர்வாக அலுவலகத்தை தோப்பூரில் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மதுரை மாவட்டம் தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018, ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2019 ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 4 ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படாமலும், அரசாணை வெளியிடப்படாமலும் இருந்தது.

இதனை தொடர்ந்து  தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைப்பதற்கான அரசாணையை ஒன்றிய அரசு கடந்த 2020 ஜூலை மாதம் வெளியிட்டது. தற்போது 90 சதவீத சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மட்டும் முடிந்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தோப்பூர் அரசு மருத்துவமனையின் ஒரு கட்டிடம் தற்காலிக நிர்வாக அலுவலகம் அமைக்க ஒன்றிய அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை இந்த பழைய கட்டிடத்தில் ரூ.2.16 கோடி செலவில் இயக்குநர் அலுவலகம், பொறியாளர்கள் அலுவலகம், கூட்ட அரங்கம் ஆகியவை அடங்கிய தற்காலிக நிர்வாக அலுவலகம் அமைக்கும் பணிகளை துவக்கியுள்ளது. இந்த பணி 6 மாதத்திற்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.