முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் பிறந்தநாளை பொங்கல் விழாவாக கொண்டாடிய மக்கள்!

முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்-ன் பிறந்த நாளை பொங்கல் விழாவாக கொண்டாடி மகிழ்ந்த தேனி மாவட்ட பாலார்பட்டி கிராம மக்கள்.
தேனி மாவட்டம் போடி அருகே பாலார்பட்டி கிராமத்தில் தைத் திருநாளான இன்று, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்ணல் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள் விழாவை கிராமத்தினர் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
image
இந்நிலையில், இந்த வருடம் தைத் திருநாளான இன்று ஜான் பென்னிகுவிக்-ன் 182-வது பிறந்தநாளை முன்னிட்டு பாலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஜான் பென்னிகுவிக் உருவப்படத்தை கைகளில் ஏந்தியவாறு, ஜல்லிக்கட்டு காளைகளுடன் வாத்தியங்கள் முழங்க தேவராட்டம் ஆடி கொண்டாடினர். மேலும் பொங்கல் பானைகளுடன் கிராமம் முழுவதும் பெண்களும் ஊர்வலமாக ஆரவாரத்துடன் வந்தனர்.
image
அதனைத்தொடர்ந்து இங்குள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்-ன் நினைவு கலையரங்கம் முன்பு சுமார் 80-க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கும்போது குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என கொஷமிட்டு கொண்டாடினர். பின்பு ஜான் பென்னி குவிக்-ன் திருவுருவப் படத்திற்கு கிராம மக்கள் விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
image
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஐந்து மாவட்ட விவசாயிகளின் நீராதரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தாங்கள் கடவுளாகவே வணங்கி வருவதாகவும், எங்களது பாலார்பட்டி கிராமத்தில் 24 வருடங்களாக அவரது பிறந்த நாளை பொங்கல் விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தனர். எங்களின் மனிதக் கடவுளான ஜான் பென்னிகுவிக் எங்களது வாழ்விலும் அடுத்த எத்தனை தலைமுறைகள் வந்தாலும், அவரை மறக்காமல் கடவுளாக கொண்டாடுவோம் எனவும் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.