திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த இளைஞர், காளை முட்டியதில் உயிரிழந்தார். மாட்டுபொங்கலை ஒட்டி, இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 610 காளைகள் களமிறக்கப்பட்டன.
314 மாடுபிடி வீரர்கள், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர்.
இந்நிலையில், வாடிவாசலை விட்டு வெளியே வந்த காளை போட்டிக் களத்தை கடந்து, ஓடி வந்த போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த அரவிந்த் என்ற இளைஞரை முட்டிக் கீழே தள்ளியது.
இதில் காயமடைந்த அரவிந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியின் போது காளைகள் முட்டி 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போட்டியின் முடிவில், 17 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்த பூபாலன் என்ற இளைஞர், இருசக்கர வாகனத்தை தட்டிச் சென்றார். 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.