திருச்சி : திருச்சி மாவட்டம் சூரியூரில் திங்கள்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த காளை முட்டியதில், காளமாவூரைச் சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்சியர் பிரதீப்குமார் உறுதிமொழியை வாசிக்க வீரர்கள் உறுதிமொழியேற்க போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் 600 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 400 வீரர்கள் குழுக்களாக களமிறங்குகின்றனர்.
இந்நிலையில், காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீரர்கள் உற்சாகத்துடன் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கி வந்தனர். இதுவரை நடந்த போட்டியில் 11 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்துள்ளனர்.
11 பேர் காயம்: இதில் ஜல்லிகட்டு கமிட்டியைச் சேர்ந்த சம்பத் (29), பார்வையாளர்களான வேங்கூரை சேர்ந்த நிவாஸ் குமார் (28), களமாவூரைச் சேர்ந்த அரவிந்த் (25), கள்ளிக்குடியைச் சேர்ந்த கோபி ( 27 ), சன்னாச்சி பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (59), வீரப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (20), கோவிலடியைச் சேர்ந்த தனுஷ் (19), கீரனூரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (22), கண்ணாங்குடியைச் சேர்ந்த பழனி (14) மாட்டின் உரிமையாளர்களான சப்பானிப்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் (24), எட்டுகல் பட்டியைச் சேர்ந்த செல்லமுத்து (35) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரவிந்த் என்ற இளைஞரின் மார்பு பகுதியில் காளை பலமாக குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.
அரவிந்த் உயிரிழப்பு: இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரவிந்த் சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்தார். சூரியூர் ஜல்லிக்கட்டைக் காணச் சென்ற இளைஞர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மதுரை மாவட்டம் பாலமேட்டில் திங்கள்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 காளைகளை அடக்கிய பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் காளை முட்டியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதன் விவரம்: பாலமேடு ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் உயிரிழப்பு
-ஜி.செல்லமுத்து