சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியை இருந்த சுவடே இல்லாத வகையில் இடிக்க வேண்டுமென்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “#வேங்கைவயலில் மனிதக் கழிவு கொட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி பேரிழிவின் சின்னம். அது இருந்த சுவடே இல்லாத வகையில் இடிக்கப்பட வேண்டும். ஆதிதிராவிட சமூகத்தினருக்குத் தனிக் குடிநீர்த் தொட்டி அமைப்பது கூடாது. தேநீருக்கு இரட்டைக் குவளை கூடாதெனில்; குடிநீருக்கு இரட்டைத் தொட்டியும் கூடாது!” என்று பதிவிட்டுள்ளார்.
வேங்கைவயலில் நடந்தது என்ன? புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது டிச.26-ம் தேதி தெரியவந்தது. அன்றிலிருந்து அந்தக் குடிநீர்த் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மாற்றுத் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேரை உள்ளடக்கிய விசாரணைக் குழு விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 85 சாட்சிகளிடம் விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் தமிழக அரசின் சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவினர் வேங்கைவயலில் நேரில் ஆய்வு செய்துள்ளது.
இது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தபட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜன.19ல் ஆர்ப்பாட்டம்: முன்னதாக நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தொல்.திருமாவளவன் “புதுக்கோட்டை சம்பவம் தொடர்பாக வருகிற 19ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அங்கு நடைபெற்ற சம்பவம் ஒரு வெட்கக்கேடானது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உள்ளதை விசிக வரவேற்கிறது. தேநீருக்கு இரட்டை குவளை கூடாதெனில் குடிநீருக்கும் இரட்டைத்தொட்டியும் கூடாது. அந்த தொட்டியை தரை மட்டமாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் ஒரே தொட்டியை அரசு உருவாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அதிமுக பாஜகவின் துணை அமைப்பு: அதேபோல், தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்பதை உருவாக்குவது ஒரு குதர்க்கவாதம். மதவாத, பிற்போக்கு சக்திகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்க வேண்டும் என்று அச்சர்ச்சையில் தனது நிலைப்பாட்டை தெளிவுபட்டுத்தினார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறி உள்ளதாகக் கூறினார்.