பணம் கேட்டு மிரட்டப்பட்டதால் ரூ.6,000 கோடி முதலீடு கர்நாடகா சென்றதாக துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பணம் கேட்டு மிரட்டப்பட்டதால் தான் 6,000 ரூபாய் மகாராஷ்டிராவில் முதலீடு செய்யப்பட இருந்த தொழிற்சாலை கர்நாடகாவுக்குச் சென்றுவிட்டதாக துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்தார். பணம் கேட்டு மிரட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார். பட்நவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். அதற்கு முன் உத்தவ் தாக்கரே தலைமையில் மகாராஷ்டிரா விகாஸ் அகாடி ஆட்சி இருந்தது.
உத்தவ் தாக்கரே ஆட்சியில்தான் மேலே சொல்லப்பட்ட சம்பவம் நடந்ததாக புனேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பட்நவிஸ் கூறினார். இதே நிலைமை நீடித்தால் மகாராஷ்டிரா மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள் என்றார்.
இதனால் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் ஒடுக்கப்பட வேண்டும். எனவே இப்படிப்பட்டவர்கள் மீது மதம், சாதி, அரசியல், அவர்கள் சார்ந்துள்ள அமைப்பு பற்றி கவலை கொள்ளாமல் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.
நடவடிக்கை எடுக்க தவறும் போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் பெருமளவில் மனித வளம் உள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் முதலீடு செய்ய பலர் முன்வருகிறார்கள். தொழிற்சாலை விவகாரங்களில் அரசியலைப் புகுத்தாதீர்கள் என்று அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் சில அரசியல் தலைவர்கள் தொழிலாளர்களி்ன் முதுகில் ஏறி பணத்தை சுரண்ட முயற்சிக்கிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாது.அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என்றார்.
மும்பைக்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 2வது பெரிய வளர்ச்சி மண்டலம் புனேதான். எனவே புனே மீது மாநில அரசு அதிக கவனம் செலுத்துகிறது என்று பட்நவிஸ் கூறினார்.
newstm.in