ஒவ்வொரு வருடமும் தைத்திங்கள் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் தை முதல் நாளான நேற்று உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல், ஜல்லிக்கட்டும் ஒரு புறம் காலை கட்டி வருகிறது.
தமிழகத்தில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி சிறப்பாக நடைபெற்ற நிலையில், இன்று பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியை முன்னிட்டு மருத்துவ குழு, போலீஸ் பாதுகாப்பு தீயணைப்புத்துறை என்று அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி ஆரம்பம் ஆகுவதற்கு ,முன்பு, மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன் மற்றும் பூமிநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் விழாக்குழுவினர் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
அதன் பின்னர், ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்தில் உள்ள 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 900 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிடப்பட உள்ளன. இந்த நிலையில் போட்டியில் சீருடை மாற்றி அணிந்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட பதினான்கு மாடுபிடி வீரர்கள் சிக்கினர்.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் போட்டியில், போலீஸ் தலைமை காவலர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் நான்கு பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.