மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிரவைத்த கணீர் குரல்… யார் இந்த பெண் போலீஸ்?

உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று காலை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் வருகை புரிந்து விழாவில் பங்கேற்றனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு

விழாவிற்கு இடையில் வாடிவாசல் பகுதியில் பொதுமக்களை வெளியேற்றுவது, வாகனங்களை அப்புறப்படுத்துவது, வீரர்களை ஒழுங்குபடுத்துவது என மாவட்ட ஆட்சியர், விழா ஏற்பாட்டாளர்களின் குரல் மைக் மூலம் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்தது. இதற்கிடையில் பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் குரலும் உத்தரவு பிறப்பிக்கும் வகையில் ஒலித்தது. இவர் யார் என்ற தேடல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

யார் அந்த அதிகாரி?

அடிக்கடி செய்திகளை கவனிக்கும் சிலருக்கு தெரிந்த முகமாக இருந்தாலும் பலருக்கு அவர் மைக்கில் பேசும் போது, யார் அந்த அம்மா? இப்படி சவுண்ட் விடுறாங்க? எனக் கேட்க வைத்தது. இவர் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி ஐபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2008ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர்.

பொன்னி ஐபிஎஸ் பின்னணி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஏ.எஸ்.பியாக தனது பணியை தொடங்கியவர். அதன்பிறகு செங்கல்பட்டு ஏ.எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டார். 20 மாதங்கள் சேவையாற்றிய நிலையில் மே 2011ல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றார். ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் எஸ்.பியாக பதவி வகித்துள்ளார். தனது பதவிக் காலத்தில் மிகவும் கறார் பேர்வழி என்ற பெயரை பெற்றவர்.

மணல் மாஃபியா ரெய்டு

செங்கல்பட்டில் பணியில் இருந்த 26 மணல் குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார். மணல் மாஃபியாவை தடுக்க முயற்சித்தாலே யாராக இருந்தாலும் வண்டி ஏற்றி கொலை செய்யும் அளவிற்கு நிலைமை இருந்தது. இந்த சூழலில் தனது ஓட்டுநர் உடன் தனியாக ரெய்டுக்கு சென்று தெறிக்க விட்டுள்ளார். மேலும் ஈரோட்டில் பதற்றம் நிறைந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை ஒடுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஜெ., கைகளால் விருது

இவரது சேவையை பாராட்டி 2014ஆம் ஆண்டு கல்பனா சாவ்லா விருதை வழங்கி கவுரவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. தற்போது மதுரை சரக டிஐஜியாக பதவியேற்ற பின்னர் தனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தவறுகள் நடக்காமல் தொடர்ந்து கண்காணிப்பை வேகப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வு அளிக்கும் மற்றும் உத்வேகம் ஊட்டும் வகையில் உரை நிகழ்த்தி வருவதையும் பார்க்கலாம்.

போதிய முன்னேற்பாடு

இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பு பேசிய பொன்னி ஐபிஎஸ், தென் மண்டல ஐஜி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். மொத்தம் 2,500 காவலர்கள் இருக்கின்றனர். அதிகாரிகள் மட்டும் 300 பேர் உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு கூடுதலாக காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேனி, திண்டுக்கல் என இரண்டு எஸ்.பி.,க்கள் இங்கே இருப்பதாக குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.