Varisu Thanksgiving Meet: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, துணிவு படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித்தின் துணிவு படம் வசூலில் முன்னணியில் இருந்தாலும், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என ஒட்டுமொத்தமாக சேர்த்தால் விஜய்யயின் வாரிசு முன்னணியில் உள்ளது.
இவ்விரு படங்களும் ஜன.11ஆம் தேதி வெளியான நிலையில், 5 நாள்களில் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கு சென்று பார்த்து வருகின்றனர். தற்போது பொங்கல் விடுமுறை என்பதாலும், இரு படங்களுக்கும் நேர்மறை விமர்சனங்கள் அதிகம் இருப்பதாலும் கூட்டம் அலைமோதுகிறது. இருப்பினும், தொடர்ந்து, சமூக வலைதளங்களில் விஜய் – அஜித் ரசிகர்கள் வசூலை முன்வைத்து போர் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி உடன் இணைந்து விஜய் நடித்த வாரிசு படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் மதியம் 1 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், படக்குழுவினர் அனைவரும் ஊடகத்தை சந்தித்து மக்களுக்கு, வாரிசு படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி கூற உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்த நிகழ்வில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷ்யாம், சம்யுக்தா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோருடன் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர்கள் தில் ராஜூ, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் விஜய் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால் விஜய் சர்ப்ரைஸாக விழாவுக்கு வர வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாரிசு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் வாங்கியுள்ளது. கடந்த டிச. 24ஆம் தேதி, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், விஜய் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.
விஜய் அடுத்து தனது 67ஆவது படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்க உள்ளார். அந்த படத்தின் அப்டேட் கூடிய விரைவில் வரும் என லோகேஷ் சில நாள்களுக்கு முன் தெரிவித்தார். விஜய் – லோகேஷ் கூட்டணி இதற்கு முன் மாஸ்டர் படத்தில் ஒன்றாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.