உதயநிதி – மு.க.அழகிரி சந்திப்பு: பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா? செல்லூர் ராஜூ கேள்வி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக நேற்றிரவு மதுரை சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
, தனது பெரியப்பா மு.க.அழகிரியை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உதயநிதி மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது. தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்றார்.

எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக சார்பில் கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் முழு உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்களும் நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, மதுரை கே.கே நகரில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலலிதா ஆகியோரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “உதயநிதி மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா ? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது. தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. மதுரையில் ஏற்கனவே ரவுடிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அழகிரி சந்திப்பு மூலம் என்னவாக போகின்றது. ஒன்னுமே இல்லை. விளையாட்டுதுறை அமைச்சராக உள்ள உதயநிதி, தீராத விளையாட்டு பிள்ளையாக உள்ளார். நேரு ஸ்டேடியத்தில் சிந்தடிக் டிராக் அமைப்பதற்கு 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்துள்ளளனர். அவர் பொறுப்பாக செயல்படவில்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல மு.க. ஸ்டாலின் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்படுவதாக கூறி வருகின்றார்.” என குற்றம் சாட்டினார்.

கருணாநிதியை கலைஞர் என ஏன் குறிப்பிடுகின்றோம். அவர் நடிக்க கூடியவர். அவர்கள் குடும்பமே நடிப்பவர்கள்தான். எதிர்பார்த்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, கடன் சுமை அதிகரிப்பு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை இப்படி அடுக்கி கொண்டே போகலாம் என்றும் செல்லூர் ராஜூ சாடினார்.

பாலமேடு ஜல்லிகட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த ராஜனுக்கு குறைந்த நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் உரையின் போது தரக்குறைவாக எதிர்த்து திமுக கூட்டணி கட்சியினர் கோஷம் போட்டது மரபு மீறிய செயல். முதல்வர், ஆளுநர் உரையை கண்டித்து பேசியது தமிழக மற்றும் சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளி. எதிர்காலத்தில் இதுபோல நடக்கக் கூடாது. இதற்காகவே ஆட்சியை கலைக்கலாம். வருகின்ற நாடாளுமன்றத்தோடு சட்டமன்றதிற்கு தேர்தல் வந்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்களும் திமுகவினருமே தயாராக உள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் வீண் வரி செலவுகளை குறைக்க முடியும். இது மோடிஜியின் கனவு திட்டம், வல்லரசு நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கின்றார். மதுரையில் உள்ள உலகதமிழ்ச்சங்கத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும். எம்ஜிஆரை பெரியப்பா என சொல்லும்
மு.க.ஸ்டாலின்
எம்ஜிஆர் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.