கண்களால் கணினி இயக்கம்; ஆச்சர்யப்படுத்தும் பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள்!

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்கை முன் மாதிரியாகக் கொண்டு, கண்களால் கம்ப்யூட்டரை இயக்கும் செயலியை உருவாக்கியுள்ளார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் சி. கிஷோர் மற்றும் க.சிவமாரிமுத்து.

ஆசிரியை சுமித்ராவுடன் மாணவர்கள்

இம்மாணவர்கள், ஒரு மாத காலம் தீவிரமாக முயற்சி செய்து, தாங்களாகவே பைத்தான் குறியீட்டு முறையை கற்றுக் கொண்டுள்ளனர். பள்ளியின் கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் பைத்தான் குறியீட்டு முறை மூலம், மாற்றுத்திறனாளிகள் எளிதாகக் கண்களால் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பயன்படுத்தும் வகையில், சொந்தமாக செயலியை உருவாக்கியுள்ளார்கள்.

குரல் மூலம் எந்த மொழியிலும் எவ்வித பேச்சு உச்சரிப்பில் பேசினாலும் கம்ப்யூட்டர் செயல்பட உதவும் ’ஜார்விஸ்’ என்ற செயலியை உருவாக்க, பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியை கே. சுமித்ரா, வழிகாட்டியாக இருந்து பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார்.

மாணவர்களின் இந்த படைப்பானது, தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், 2022 நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற ஓப்பன் ஹவுஸ்-2022 அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று, சிறந்த படைப்பாளருக்கான விருதை மாணவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

இதனையடுத்து, லண்டன் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர், இந்த இரு மாணவர்களுக்கும் உதவி வருகிறார். கண்களால் மொபைல்போனை இயக்கும் செயலி மற்றும் பொருள்களை வாங்க, இணையதள குக்கீஸ் பயன்படுத்தும் செயலி உருவாக்கும் திட்டப்பணிக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.

பெற்றோருடன் மாணவர்கள்

மாணவர்கள் கே. லக்ஷ்மி காந்தன் மற்றும் எஸ். வரதராஜன் இருவரும் கூறுகையில், “திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு புதிய கற்றல் முறை (Digital Learning Management System) ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். பழைய கம்ப்யூட்டரை கொண்டே கண்களால் கம்ப்யூட்டரை இயக்கும் செயலியை உருவாக்கியுள்ளோம். புதிகாக உயர் ரக கம்ப்யூட்டர் வாங்க உதவியை எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு கிடைத்தால், எதிர்காலத்தில் செயலியின் பாதுகாப்பு அம்சமாக தனி ஒரு நபர் மட்டுமே கண்களை கொண்டு கம்ப்யூட்டரை இயக்கும் வகையில் செயலியை மாற்ற முடியும். ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள கண்களின் தரவுகளை கொண்டு பணம் எடுக்கும் இயந்திரங்களில் பாதுகாப்பு அம்சத்தை உயர்த்தும் செயலியையும் உருவாக்கும் எண்ணம் உள்ளது’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.