புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு அதிகாரிகள், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என ஒப்புகொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனை ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா தடுப்பூசியினால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஐசிஎம்ஆர் மற்றும் மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுவது தவறான தகவலாகும். உலக சுகாதார மையம், நோய் கட்டுப்பாடு மையம் மற்றும் சுகாதார துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த உலகளாவிய சான்றுகள் உள்ளன. மற்ற அனைத்து தடுப்பூசிகள் போலவே வெவ்வேறு கொரோனா தடுப்பு மருந்துகளுடன் தடுப்பூசி போடுபவர்களுக்கு ஊசி போடும் இடத்தில் வலி, தலைவலி, சோர்வு போன்ற லேசான அறிகுறிகள் ஏற்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
