தமிழகத்தையே உலுக்கிய திமுக அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ஜெயராமன் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு இன்று உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நடை பயிற்சிக்குச் சென்ற பொழுது மர்ம நபர்களால் அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில் கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள சந்தேகிக்கப்படும் ரௌடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்திட அனுமதி கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்திட நீதிபதி சிவகுமார் அனுமதி வழங்கினார்.

அதன் அடிப்படையில் சாமி ரவி, திலீப், சிவ ராஜ்குமார், சத்யராஜ், நாராயணன், சிவா, கணேசன், தினேஷ் உள்ளிட்ட 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பேரில் இன்று முதல் வரும் ஜனவரி 21 ஆம் தேதி வரை சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி ஆய்வக அலுவலர்கள் சம்மதம் தெரிவித்து சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

டெல்லியில் இருந்து அனுமதி கிடைத்ததை அடுத்து இன்று முதல் நாள் ஒன்றுக்கு 3 பேர் வீதம் 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 10 ஆண்டுகளாக மர்மம் நிலவி வரும் அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.