பாகிஸ்தான் நாட்டில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வருகிறார். ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கரின் மகன் அலிஷா மும்பையில் வசித்து
வருகிறார். கடந்த ஆண்டு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பு உடைய இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், பலரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அலிஷாவிடம் வாக்குமூலம் பெற்ற என்ஐஏ அதிகாரிகள் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர். அதில் அலி ஷா கூறியுள்ளதாவது:
தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அதே நேரத்தில் முதல் மனைவி மெஜாபின் ஷேக்கை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இவர் மீது இருக்கும் விசாரணை அமைப்புகளின் கவனத்தை திசை திருப்பவே தாவூத் இரண்டாவது திருமணம் செய்து
கொண்டுள்ளார்.
முதல் மனைவியை, 2022 ஆம் ஆண்டு துபாயில் சந்தித்து பேசினேன். அப்போது தான் இரண்டாவது திருமணம் பற்றிய தகவல் தெரிந்தது. தாவூத் உறவினர்களுடன் வாட்ஸ் ஆப் செயலி மூலம் இன்னும் தொடர்பில் தான் உள்ளேன்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அலிஷா கூறியுள்ளார்.