பொங்கல் பண்டிகையையொட்டி புதுமாப்பிள்ளைக்கு 379 வகையான உணவுகளுடன் பிரமாண்ட விருந்து: ஆந்திராவில் பெண் வீட்டார் அசத்தல்

திருமலை: ஆந்திராவில் புதுமாப்பிளைகளுக்கு 379 வகையான உணவுகளுடன் பிரமாண்ட விருந்து வைத்து பெண் வீட்டார் அசத்தினர். ஆந்திர மாநிலத்தில் திருமணமாகி புதிதாக வீட்டிற்கு வரும் மருமகனுக்கு விருந்து அளிப்பது நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கோதாவரி மாவட்ட மக்கள் விருந்தினருக்கு மரியாதை செலுத்துவதில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், ஏலூரை சேர்ந்த புத்தமுரளிதர்-கொருபள்ளி குசுமா இருவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, இந்த சங்கராந்தியை(பொங்கல்) பண்டியை முன்னிட்டு நேற்று முன்தினம் கொருபள்ளிகுசுமாவின் பெற்றோர் புதுமாப்பிள்ளையான புத்தமுரளிதருக்கு இனிப்பு, காரம், பழங்கள் மற்றும் ஜூஸ் உள்ளிட்ட 379 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட சைவ உணவு விருந்தினை வைத்து அசத்தியுள்ளனர். இதேபோல், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த காசிவிஸ்வநாத்-லட்சுமி தம்பதியினர் தங்களது மகள் அகில்-மருமகன் நாராயணாவிற்கு  108  வகையான இனிப்புகளுடன்  விருந்து வைத்துள்ளனர்.

மேலும், மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தை சேர்ந்த தொழிலதிபர் தடவர்த்திபத்ரியும், சந்தியாவும் தங்களது மருமகனுக்கு 173 வகையான உணவுகளை தயாரித்து பரிமாறியுள்ளனர். புதுமாப்பிள்ளைகளுக்கு அந்தந்த மாமியார் ஊட்டி விட்டுள்ளனர். சங்கராந்தி பண்டிகையையொட்டி மகள் மற்றும் மருமகனை வீட்டிற்கு விருந்தினர்களாக அழைத்து உபசரித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.