சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு: நாளை மறுநாள் நடை அடைப்பு

திருவனந்தபுரம்,

சபரிமலையில் 2022-2023 ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் நேற்று முன்தினம் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து 18-ம் படிக்கு அய்யப்ப சாமி பவனி நடைபெற்றது.

நடப்பு சீசனின் கடைசி நெய்அபிஷேகம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைகிறது. தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும் அய்யப்பனை தரிசிக்க இன்றே கடைசி நாள். இதனால் சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தரிசனம் நேரம் குறைப்பு

சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1.30 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இன்று முதல் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி தொடங்கிய படி பூஜை நாளை (வியாழக்கிழமை) வரை நடைபெறும். மேலும், நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நடை அடைப்பு

நாளை இரவு 10 மணிக்கு மாளிகப்புரத்தம்மன் குருதி நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அன்றையதினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி திறக்கப்படும்.

சபரிமலையில் நடப்பு சீசனில் நேற்று வரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடப்பு சீசன் முடிய இன்னும் 2 தினங்கள் உள்ளன. இந்த நாட்களில் 2 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நடப்பு சீசனில் தரிசனம் செய்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காணிக்கை பணம் வீண்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கேரள பக்தர்களை விட தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலான பக்தர்கள் இருமுடிக்கட்டில் வெற்றிலை, பாக்குடன் காணிக்கை பணத்தையும் சேர்த்து கட்டி வைப்பது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாட்களாக பல உண்டியல்களை தேவசம் போர்டு ஊழியர்கள் திறந்து பார்க்கவே இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் சில உண்டியல்களை திறந்தபோது அதில் வெற்றிலை, பாக்கு அனைத்தும் அழுகிய நிலையில் இருந்தன. மேலும் அதனுடன் சேர்த்து கட்டி வைக்கப்பட்டிருந்த பணமும் பயனற்ற நிலையில் காணப்பட்டது. இப்படி பல லட்சம் ரூபாய் காணிக்கை பணம் வீணாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.