செய்யாறு: செய்யாறு பஸ் நிலையம் அருகே இருந்த விநாயகர் கோயில் நள்ளிரவு இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் அருகே டூவீலர்கள் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு காரில் வந்த 4 மர்ம நபர்கள் இக்கோயிலை இடித்துள்ளனர்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இந்து முன்னணியினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் இந்து முன்னணி நகர தலைவர் மோகன்ராஜ் தலைமையிலான அமைப்பினர் செய்யாறு போலீசாருக்கு தெரிவித்தனர். மேலும் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கோயிலை இடித்துக்கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே தகவலறிந்து வந்த டிஎஸ்பி வெங்கடேசன், கோயிலை இடித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார். இதை ஏற்று போலீஸ் நிலையம் முன் திரண்டிருந்த இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர். இரவோடு இரவாக கோயிலை இடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.