சேலம்: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதியில் அரசின் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த பார்வையாளர்கள் 58 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீஸார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி பேரூராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியானது, பேருந்து நிலையம் சந்தப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. அரசு அனுமதியில்லாததால், தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை. மேலும், திறந்தவெளியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், போட்டியை காண வந்த பார்வையாளர்களை ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து சென்று, முட்டியதில் 26 பார்வையாளர்கள் காயம் அடைந்தனர்.
அதில் தம்மம்பட்டி கல்லூரி மாணவன் சந்துரு (20) , உலிபுரத்தைச் சேர்ந்த கலியபெருமாள் (65), ஆனந்த் (32), ரவி (30), பிரபு உள்ளிட்ட ஐந்து பேருக்கு பலத்த காயம் அடைந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், 21 பார்வையாளர்களுக்கு லேசான காயம் அடைந்து, தம்மம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அதேபோல, செந்தாரப்பட்டி பேரூராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் அரசு அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் சீறிப்பாய்ந்ததில் 32 பேர் காயம் அடைந்தனர். இதில் செந்தாரப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (65), நடராஜன் ( 47 ), கூலமேடு பகுதியை சேர்ந்த காசி(43), லோகேஷ் (16) நான்கு பேர் படுகாயம் அடைந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் 28 பேருக்கு லேசான காயம் அடைந்து முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தாரப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (65), தம்மம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவன் சந்துரு ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் அனுமதியில்லாமல் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 9 பேர் பலத்த காயமும், 49 பேர் லேசான காயம் அடைந்தனர். மொத்தம் 58 பார்வையாளர்கள் அனுமதியில்லாமல் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீஸாரும், வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.