
ஜெயிலர் படத்தில் இணைந்த சுனில்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒரேநாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என ஏற்கனவே ரஜினி படங்களில் நடித்தவர்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளார்கள். அதே சமயம் கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமார் இந்த படத்தில் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலிங் நடிப்பதற்காக இணைந்தார். ரஜினியும் இவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த நகைச்சுவை நடிகரான சுனில் இந்த படத்தில் இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். ஏற்கனவே புஷ்பா படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்திய சுனில், தற்போது இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ரஜினி நடிக்கும் இந்த ஜெயிலர் படத்தில் மூன்று மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் இடம் பெற்றிருப்பது பான் இந்தியா ரிலீஸாக இந்த படம் வெளியாகும்போது மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.