கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் நேற்று மதியம், மகாதி ரோட்டிலுள்ள டோல் கேட்டிலிருந்து ஹாசஹல்லி மெட்ரோ ஸ்டேஷன் வரையில், முதியவர் ஒருவரை, ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையில் ஸ்கூட்டரில் வாலிபர் இழுத்துச்சென்றுள்ளார். இதைக்கண்ட வாகன ஓட்டுநர்கள், அவரை தடுத்து நிறுத்தி, காயமடைந்திருந்த அந்த முதியவரை மீட்டு, அந்த வாலிபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து பெங்களூரு மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தோம், ‘‘ஸ்கூட்டர் ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த சாஹில் (25), 71 வயதான முத்தப்பா ஓட்டி வந்த பொலேரோ காரில் இடித்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். முத்தப்பா காரிலிருந்து இறங்கியதும் சாஹில் அவரிடம் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

அப்போது, முத்தப்பா அந்த ஸ்கூட்டரின் பின் கம்பியை பிடித்த நிலையில், ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஓட்டிய சாஹில், முதியவரை தரதரவென 800 மீட்டருக்கு மேல் இழுத்துச்சென்று அட்டூழியம் செய்துள்ளார். ஆட்டோ ஓட்டுனர்கள் வாகனத்தை குறுக்க நிறுத்தி சாஹிலை பிடித்துள்ளனர். அவரை கைது செய்து விசாரிக்கிறோம். முத்தப்பாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்,’’ என்றனர்.
முதியவர் என்றும் பாராமல், தரதரவென அவரை இழுத்துச்சென்ற வாலிபரின் செயல் குறித்த வீடியோவை, சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வாலிபரின் மனசாட்சியற்ற செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.