நாளுக்கு நாள் சிகிச்சைக்கான செலவு அதிகரித்து வருகிறது,இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சுகாதார சேவைகளின் பணவீக்க விகிதம் சில்லறை பணவீக்க விகிதத்தை விட அதிகமாக உள்ளதால் தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியமும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் அதிகரித்து வரும் சிகிச்சைச் செலவு காரணமாக மக்களுக்கு நிவாரணத்தை அளிக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிடயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி 2023 யூனியன் பட்ஜெட்டில், வருமான வரிச் சட்டத்தின் 80டி பிரிவின் கீழ் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.
மக்கள் தொகையில் பெருபாலானோரிடம் ஹெல்த் பாலிசி கிடையாது
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் மிகக் குறைந்த விகிதத்தில் மட்டுமே ஹெல்த் பாலிசி இருக்கிறது. அதனால்தான் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்கான செலவை தங்கள் பாக்கெட்டில் இருந்து ஏற்க வேண்டியிருக்கிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு, மக்களின் மருத்துவச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இது நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பிரிவு 80டியின் கீழ், 60 வயதுடையவர், ஹெல்த் பாலிசிக்கான பிரீமியத்தில் ஆண்டுதோறும் ரூ.25,000 கழிக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு வரம்பு ரூ.50,000 ஆகும்.
பிரிவு 80டியின் வரம்பை அதிகரிக்க வேண்டும்
இது குறித்து ஆப்டிமா மனேஜர்ஸ் நிறுவனர் பங்கஜ் மத்பால், சிகிச்சை முற்றிலும் இலவசம் இல்லாத நாட்டில், எந்த வரம்பும் இல்லாமல் மருத்துவச் செலவில் 100% விலக்கு அளிக்க அரசு அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் அதிக ஹெல்த் பாலிசி பிரீமியத்திற்கு ஒரு காரணம், தற்போது பலரிடம் ஹெல்த் பாலிசி இல்லை என்பது தான். 2023 யூனியன் பட்ஜெட்டில் ஹெல்த் பாலிசியின் பிரீமியத்தின் மீதான விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டால், அது காப்பீட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும்.
மூத்த குடிமக்களுக்கு கூடுதல் நிவாரணம் தேவை
அதேபோல் மூத்த குடிமக்கள் மீது அதிக அழுத்தம் உள்ளது. ஏனென்றால், அவர்களுக்கு 80டி பிரிவின் கீழ் வரம்பு ரூ.50,000 மட்டுமே உள்ளது என்பது தான். மருத்துவச் செலவு மிகவும் அதிகமாகிவிட்ட நிலையில், கூடுதல் காப்பீட்டுடன் பாலிசி எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதிக காப்பீடு கொண்ட பாலிசிக்கான பிரீமியமும் அதிகம். எனவே, ஹெல்த் பாலிசியின் பிரீமியத்தின் மீதான விலக்கு வரம்பை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும்.