உலகப் பொருளாதார மன்றம் 2023: கவனம் ஈர்த்த தமிழ்நாடு அரங்கு!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum – WEF) வருடாந்திரக் கூட்டம் 2022இல் தமிழ்நாடு முதன் முறையாக பங்கேற்று, உலகின் முன்னணி முதலீட்டாளர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்திடுவது குறித்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அது போலவே, இந்த ஆண்டும், டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் 2023 ல் தமிழ்நாடு முன்னைவிடவும் பெருமளவில் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி, மாநிலத்தில் நிலவும் சிறப்பான பொருளாதார மற்றும் தொழில் புரிவதற்கான சூழல் மீது உலக முதலீட்டாளர்களின் கவனத்தினை மிகப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

கடந்த ஆண்டை விடவும் அதிக அளவிலான உறுப்பினர்களுடன், இந்த உயர் மட்ட முதலீட்டுக் குழு, உலகப் பொருளாதார மன்றம் 2023இல் பங்கேற்றுள்ளது. இக்குழு, முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்குத் தேவைப்படும் தகவல்களை அளித்து, மாநிலத்தில் நிலவும் சிறப்பான முதலீடு மற்றும் பொருளாதாரச் சூழலையும், முதலீட்டிற்கான வாய்ப்புகளையும் எடுத்துரைப்பதன் மூலம், அந்நிறுவனங்களின் முதலீடுகளை, தமிழ்நாட்டிற்கு ஈர்த்திட முயற்சிகள் மேற்கொண்டது.

2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மையத்தின் துவக்க நிகழ்ச்சியாக, தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ப்ரோமனேட் 73இல் உள்ள தமிழ்நாடு அரங்கை அதிகார பூர்வமாக திறந்து வைத்தார். பல்வேறு உலக முதலீட்டாளர்களை ஈர்த்ததோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழ்நிலையை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய பல தொழில் தலைவர்களையும் பொருளாதார வல்லுநர்களையும், தமிழ்நாடு அரங்கு பெருமளவில் ஈர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வருடாந்திரக் கூட்டத்தின் முதன்மை குறிக்கோள், உலகப் புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களின் முக்கிய தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் தொடர் சந்திப்புகள் மேற்கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் பிரகாசமான முதலீட்டுச் சூழலை அவர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களின் முதலீடுகளை ஈர்த்திடுவதற்கான வாய்ப்புகளை பெருக்குவதே ஆகும். நமது மாநிலம், சிறப்பான மற்றும் வலுவான பொருளாதார மற்றும் முதலீட்டுச் சூழல் நிலவிடும் மாநிலமாக விளங்குவதால், உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடிகளை நன்கு எதிர்கொள்ளும் திறன் கொண்டுள்ளதை, நமது முதலீட்டுக் குழு, சந்திப்பு மேற்கொண்ட அனைத்து தரப்பினருக்கும் எடுத்துரைத்தது.

அது மட்டுமின்றி, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 – 11 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள சூழ்நிலையில், இவ்வாறான உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டு, நம் மாநிலத்தின் முதலீட்டுச் சூழ்நிலையினை பரவலாக பிரகடனப்படுத்துவது, அந்நிகழ்வுக்கு பெருமளவில் முதலீட்டாளர்களின் வரவை அதிகரித்திடும் என்பதும் குறிப்பிடத்தக்கதே.

இந்த ஆண்டிற்கான உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் 2023ல் கலந்து கொண்டுள்ள உயர்மட்டக்குழுவில், தமிழ்நாடு அரசு சார்பில் மாண்புமிகு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் அதிக அளவில் பங்கேற்றனர். “நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வில், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.

தமிழ்நாடு அபார தொழில் வளர்ச்சியுடன், செழிப்பான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட மாநிலமாக விளங்குவதோடு மட்டுமின்றி, உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுத்து வருவதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தெற்காசியாவிலேயே, முதல் மற்றும் ஒரே மேம்பட்ட உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்வதையும், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், தொழில் நுட்பங்களை மாற்றிக்கொள்வதிலும், உலகளவில், தமிழ்நாடு முன்னணியில் இருப்பதையும் எடுத்துரைத்தார்,

பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளில் இந்த உயர் மட்ட முதலீட்டுக் குழு கலந்து கொண்டது. “தமிழ்நாடு – எரிசக்தி விநியோகச் சங்கிலியில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான சூழலமைப்பு” என்ற தலைப்பில் ஒரு வட்ட மேசை விவாதம், ‘நிலையான வளர்ச்சிக்கான மேம்பட்ட உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குதல்’ மற்றும் ‘உலகளாவிய திறன் மையங்களை மறுவடிவமைத்தல்’ என்ற தலைப்பில் இரண்டு மதிய உணவு விவாதங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் ஏராளமான தொழில் தலைவர்கள், கல்வி மற்றும் அரசாங்கம் சார்ந்த பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இக்கூட்டங்களும் நிகழ்வுகளும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உற்பத்திப் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நுணுக்கமான மற்றும் சிறப்பு அம்சங்கள், மாநிலத்தின் முதலீடு வாய்ப்புகள், மாநிலத்தில் முதலீடு செய்வதால் ஏற்படும் பல்வேறு நன்மைகள் பற்றிய தகவல்களை எடுத்துரைத்து, முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.