சென்னை, பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் கடந்த 18.1.2023-ம் தேதி ஆவடி செல்வதற்காக கால் டாக்ஸியை முன்பதிவு செய்திருக்கிறார். பின்னர் கால் டாக்ஸியில் கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து ஆவடியை நோக்கி செல்வி பயணித்திருக்கிறார். அப்போது கால் டாக்ஸி டிரைவர், ஆவடிக்கு வேறுபாதையில் சென்றதாகத் தெரிகிறது. அதை கவனித்த செல்வி, `ஏன் இந்த வழியில் செல்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு கால் டாக்ஸி டிரைவர், `எனக்கு வழி தெரியும். நீங்கள் அமைதியாக இருங்கள்’ என்று கூறியதோடு செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். அதனால் கால் டாக்ஸி டிரைவருக்கும் செல்விக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து செல்வி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும் செல்வி கூறிய தகவலின்படி கால் டாக்ஸி டிரைவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கோபாலகிருஷ்ணன் எனத் தெரியவந்தது. இவர் திருவேற்காடு பகுதியில் வசித்து வருகிறார். விசாரணைக்குப் பிறகு கோபாலகிஷ்ணன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து ஒரு கார், செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து நீலாங்கரை போலீஸார் கூறுகையில், “செல்வி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கால் டாக்ஸி டிரைவர் கோபாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.