ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் அனுமதியுடன் துப்பாக்கி வைத்துள்ள அனைவரும் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு “தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் முறை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேர்தலில் வாக்களிப்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படும்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் கண்காணிப்புக்காக 3 பறக்கும் படைகள் மற்றும் 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வேட்பு மனு தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் இடைத்தேர்தலில் ரூ.40 லட்சம் வரை செலவழிக்கலாம்” என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.