தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் ஏற்கனவே வெளியான பிச்சைக்காரன் படம் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த படப்பிடிப்பில் ஸ்கூட்டர் போட் ஓட்டும் காட்சியில் நடித்தபோது எதிர்பாரத விபத்தில் சிக்கினார்.
அதிவேகமாக போட்டை ஓட்டிக் கொண்டு சென்றபோது அவரது போட் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. உடனடியாக நீரில் மூழ்கிய அவரை துணை ஒளிப்பதிவாளர் ஒருவர் தண்ணீருக்குள் குதித்து காப்பாற்றியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு நீச்சலும் தெரியாதாம். படுகாயமடைந்திருந்த அவரை உடனடியாக படக்குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனியை மருத்துவர்கள் தொடர் சிகிச்சை மூலம் அபாய கட்டத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
இப்போதும் சிகிச்சையில் இருக்கும் விஜய் ஆண்டனி அபாய கட்டத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ளார். இருப்பினும் முகத்தில் இருக்கும் காயங்களுக்காக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறதாம். இதற்காக அவரை ஜெர்மனி அழைத்துச் செல்ல விஜய் ஆண்டனி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.