வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே விஷ மருந்தை கலந்ததாக கூறப்படும் பொது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பரிசோதனைக்காக கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உப்புப்பாளையம் திருமங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (56). விசைத்தறி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள பொது கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் திறந்து விடும் பணியையும் செய்து வருகிறார். கடந்த 16ம் தேதியன்று கிணற்றில் மோட்டார் போட சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (59), அவரது மனைவி பத்மாவதி (55) ஆகிய இருவரும் கிணற்றுக்குள் எதையோ ஊற்றுவதை பார்த்துள்ளார். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது மகேந்திரனுக்கு, சண்முகமும், பத்மாவதியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் கிணற்றின் அருகே விஷ மருந்து பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே கிணற்றில் சண்முகமும், பத்மாவதியும் விஷ மருந்து கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இது குறித்து மகேந்திரன் அளித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து சண்முகம், பத்மாவதி தம்பதியரை தேடி வருகின்றனர். இந்நிலையில் பொது கிணற்றில் இருந்த தண்ணீரை எடுத்து கோவையில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பின்னர்தான் கிணற்றில் விஷம் கலந்துள்ளதா? என தெரியவரும். பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.