சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என பொறுத்திருந்து பாருங்கள் என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த சட்ட மசோதாவை முதல்வர் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
ஆதாருடன் மின்சார அட்டையை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும். ஏப்ரல் மாதம் வாட்சுக்கான பில் தருகிறேன் என பாஜக தலைவர் கூறினார். கையில் பில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் முதல்வர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.