வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெய்ஜிங்: இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சீன ராணுவ வீரர்களுடன், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
கிழக்கு லடாக் பகுதியில் தான் 2020ம் ஆண்டு மே மாதம் இந்திய சீன வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், பதற்றம் உண்டானது. இதனையடுத்து இரு நாட்டு ராணுவ வீரர்கள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில்,சீன அதிபராகவும், ராணுவத்தின் தலைவராகவும் இருக்கும் ஜின்பிங், ராணுவத்தின் தலைமையகத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சீன வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் ராணுவத்தின் செயல்பாடு மற்றும் தயார்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. எல்லை பகுதியில் சமீபநாட்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதனால், ராணுவத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஜின்பிங் பேசியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆலோசனையின் போது ராணுவ வீரர் ஒருவர், எல்லை பகுதியை 24 மணி நேரமும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக ஜின்பிங்கிற்கு பதிலளித்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள சூழ்நிலையை கேட்டறிந்த ஜின்பிங், வீரர்களுக்கு புதிய உணவு மற்றும் காய்கறிகள் கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார்.

மேலும், ராணுவ வீரர்களின் ரோந்து மற்றும் பணிகளை கேட்டறிந்த ஜின்பிங், எல்லை பாதுகாப்பில் முன்மாதிரியாக திகழ்வதாக புகழாரம் சூட்டியதுடன், அவர்களை உற்சாகத்துடன் செயல்படும்படி அறிவுறுத்தினார்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement