இனிமேலும் அந்த கொடுமை நடக்க கூடாது: கலெக்டர்களுக்கு உத்தரவிட்ட இறையன்பு

குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.

பட்டியலின சமூகத்தவர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதாலே சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள், உள்ளாட்சி இடங்கள் உள்ளிட்டவற்றில் தனித் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அந்த இடங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். இதேபோல் பெண்களுக்கென்றும் சில இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதன் மூலம் சமூக நீதி காக்கப்படும்.

உள்ளாட்சிப் பதவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களே அந்தந்த ஊர்களில் சுதந்திர தின விழா, குடியரசு தினவிழாவின் போது தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். ஆனால் சாதிக்கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சில பகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடியை ஏற்ற சில கயவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர். அவ்வப்போது தலைகாட்டும் இது போன்ற பிரச்சினைகளை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வருகின்ற வியாழக் கிழமை குடியரசு தின விழாவை முன்னிட்டு இத்தகைய பிரச்சினைகள் தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக உள்ளது.

குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் தேசிய கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “சுதந்திர தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளில் 15 இனங்கள் தொடர்பாக, அவரவர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை பெறப்பட்டு அரசால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியர்கள் 15 இனங்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து எந்த வித புகார்களும் இன்றி வரும் 26ஆம் தேதி குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும்.

26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் பட்டியலின கிராம ஊராட்சி தலைவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். இது குறித்து உரிய ஆதாரங்களை புகைப்படத்துடன் அரசுக்கு உடனுக்குடன் அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.