கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மறுபுறம் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா 58,396 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். அப்போது 66.82% வாக்குகள் பதிவாகியிருந்தது.

மொத்தமாக 1,51,292 பேர் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் திருமகன் கடந்த 4-ம் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 18-ம் தேதி மேகாலயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. இதன்படி வேட்புமனு தாக்கல் ஜன.31, வேட்புமனு நிறைவு பிப்.7, மனுக்கள் மீதான பரிசீலனை பிப்.8, திரும்பிப் பெற கடைசி நாள் பிப்.10, வாக்கு பதிவு பிப்.27, வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதிகளில் நடக்கிறது. முன்னதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

இதன்படி இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் – 1,10,713, பெண் வாக்காளர்கள் – 1,16,140, மூன்றாம் பாலினத்தவர் 23 பேரும் இருக்கிறார்கள். `இந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும், மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறேன்’ என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்வி எழுகிறது?
இது தொடர்பாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் விசாரித்தோம். “தனது மகனை இழந்த சோகத்தில் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சத்தியமூர்த்தி பவனில் நடந்த படத்திறப்பு விழா சர்ச்சை மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் நிர்வாகிகளை சந்திப்பதை கூட தவிர்த்து வந்தார். இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.

இதில், இளங்கோவன் தனது மற்றொரு மகன் சஞ்சய் சம்பத்தை தான் முதலில் நிற்க வைக்க திட்டமிட்டார். தற்போது சஞ்சய் தனது தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவருக்கு அரசியலில் பெரிதாக ஈடுபாடு இல்லை.
மறுபுறம், “கட்சிக்காக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஒரே குடும்பத்துக்குள் மீண்டும் மீண்டும் பதவி ஏன்?” என எதிர்ப்பு குரல் எழுந்தது. இதனால் கோபமடைந்த இளங்கோவன், தானே தேர்தலை சந்திக்கலாம் என திட்டமிட்டார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி தடுத்துவிட்டனர்.

அவர்கள், “நீங்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.பி யாக வேண்டும்” என, கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து திருமகனின் மனைவி பூர்ணிமாவை தேர்தலில் களமிறக்க முடிவு செய்திருக்கிறார். தற்போது அதற்கான பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
இருப்பினும் இதில் கடைசி நேர மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதுதவிர காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் என்பவரும் தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்காக கட்சி தலைமையை அவர் அணுகியிருக்கிறார். கடந்த முறையும் இவர் சீட் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் திருமகன் ஈவெராவுக்கு தான் சீட் கிடைத்தது. இந்த முறையும் இளங்கோவன் குடும்பத்துக்கு சீட் வழங்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் இடைத்தேர்தலில், செல்வாக்கு அதிக அளவில் தேவைப்படும். எனவே காங்கிரஸ் தலைமை இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக முடிவு எடுக்கும்” என்றனர்.