மதுரை: அதிமுக மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, நேற்று முன்தினம் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சம்பவம், அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவரை அதிமுகவினரும், திமுகவினரும் நெருங்கிய உறவினர்களாக இருந்தால் கூட ஒருவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மற்றவர்கள் போவதில்லை. அந்தளவுக்கு அதிமுகவினரை பொறுத்தவரையில் அவர்கள் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் திமுகவினருடன் நெருக்கமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போதும் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறார்கள்.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மதுரை மாவட்டத்தில் மட்டும் அதிமுக எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் தற்போது திமுக அமைச்சர், எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளனர். அரசு விழாக்களில் அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுக அமைச்சர்களுடன் கலந்து கொள்ள தொடங்கியுள்ளனர். அரசிலை தாண்டி நட்புடன் இருக்கிறார்கள். ஆனால், கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்ட மேடைகளில் மட்டும் ஒருவரை மற்றவர்கள் வசைப்பாடுவதால் இரு கட்சி தொண்டர்களும் குழம்பி போய் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைக்க வந்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸடாலினை, மதுரை மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா நேரில் சந்தித்த சம்பவம், அக்கட்சியில் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. சோலைராஜா மாநகராட்சியில் நேரடியாக திமுகவை கடுமையாக எதிர்த்து வந்தாலும் மறைமுகமாக அவர்களுடன் நெருக்கம் பாராட்டுவதாக ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை அவர் மறுத்துவரும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் உடன் சந்திப்பு நடந்துள்ளதால் சோலைராஜா திமுகவில் சேர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகிறது.
இதுகுறித்து சோலைராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: “நான் தமிழ்நாடு கபடி கழகத்தின் மாநில தலைவராக உள்ளேன். மேலும், தமிழ்நாடு ஒலிம்பிக் சீனியர் துணைத் தலைவராக உள்ளேன். இப்படி விளையாட்டு துறைகளில் இருந்துவிட்டுதான் அரசியலுக்கு வந்துள்ளேன். உலக கோப்பை கபடி போட்டியை நடத்த வேண்டும் என நான் இருக்கும் கபடி கழகம் சார்பில் வலியுறுத்தி வந்தோம். முதலமைச்சர் சட்டசபையில் உலக கோப்பை கடடி போட்டியை தமிழகம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், ஒய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தியுள்ளார். இந்த அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் கபடி கழக மாநிலத் தலைவர் என்ற முறையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரவித்தோம். மேலும், உலக கோப்பை கபடி போட்டியை மதுரையில் நடத்த கேட்டுக் கொண்டோம். அரசியல் வேறு, விளையாட்டு வேறு. நான் எங்கள் கட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்து சென்று சந்திக்கவில்லை. கபடி கழக நிர்வாகிகளுடன் சென்றுதான் சந்தித்தோம். மேலும், சந்திப்பு குறித்து எங்கள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூவிடம் தெரிவித்துவிட்டேன். அவருக்கும் என்னை பற்றியும், என்னோட சந்திப்பு பற்றியும் தெரியும். சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் ஒரு போதும் திமுகவில் சேர மாட்டேன். அதிமுகவில்தான் நீடிப்பேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.