* அவ்வையாருக்கு சிலை வைத்த பெருமிதம்
* புதிய நுழைவு வாயில் அமைப்பதற்கு ஏற்பாடு
சேலம்: சேலத்தில் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதில் புதிய நுழைவு வாயில் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், திருமணி முத்தாற்றின் கரையில் இருக்கிறது ஆயிரமாண்டு பழமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோவில். தமிழகத்தில் சாய்ந்த கோலத்தில் சிவன் அருள்பாலிக்கும் ஒரே கோயில் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. 1200 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர் கரபுரநாதர். அவருக்கு அர்ச்சனை செய்து வந்த அர்ச்சகர் ஒருவர், திடீரென நோயுற்றார். இதனால் அவரால் கோயிலுக்கு வர முடியவில்லை.
ஆனாலும் வழக்கமான அர்ச்சனையை செய்ய வேண்டும் என்பதற்காக தனது மகனான குணசீலன் என்ற சிறுவனை கோயிலுக்கு அனுப்பி வைத்தார். தந்தையின் அறிவுரைப்படி குணசீலனும் கோயிலுக்கு வந்து சிவனுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து, சிவலிங்கத்திற்கு மாலை அணிவிக்க முற்பட்டான். உயரம் குறைவு என்பதால் லிங்கத்தின் தலை அவனுக்கு எட்டவில்லை. இதனால் வேதனையில் ஆழ்ந்த குணசீலன், இறைவா உனக்கு மாலை அணிவிக்க முடியவில்லை. எனக்கு கருணை காட்டமாட்டாயா? என்ற கண்ணீர்மல்க வேண்டியுள்ளான். சிறுவனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த ஈசன், லேசாக தலையை சாய்த்தார். நெகிழ்ந்து போன குணசீலன், ஈசனுக்கு மாலை அணிவித்து மெய்சிலிர்த்தான்.
இதன்காரணமாகவே சாய்ந்த கோலத்தில் சிவன் அருள்பாலிக்கிறார். சிறுவனின் வேண்டுதலுக்கு செவிமடுத்து தலைசாய்த்த காரணத்தால் ‘‘முடிசாய்ந்த மன்னர்’’ என்ற திருநாமமும் இங்குள்ள இறைவனுக்கு உண்டு. கரம் கொடுத்து ஏழைகளின் துன்பங்களை புறந்தள்ளும் தெய்வம் என்பதால் ‘கரபுரநாதர்’ என்று அழைக்கப்படுகிறார் என்கின்றனர் அடியார்கள். இங்குள்ள ஈசனின் பெருமைகளை அறிந்த சோழமன்னர்கள், இங்கு வந்து இறைவனை வழிபட்டு திருப்பணிகள் செய்துள்ளனர். இதனால் ‘சோழேஸ்வரன்’ என்ற பெயரிலும், அடியார்கள் சிவனை அழைக்கின்றனர். சோழர்கள் மட்டுமன்றி சேர, பாண்டிய மன்னர்களும் கரபுரநாதரான சிவனை மனமுருக வழிபட்டு வந்துள்ளனர்.
இதை உணர்த்தும் வகையில் ராஜகோபுரத்தை அடுத்துள்ள நுழைவு வாயிலின் மேற்புறத்தில் மூவேந்தர்களின் சிலைகளும் நிர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் முன் மண்டபத்தில் உள்ள கல்தூண் மற்றும் சுவர்களில் மூவேந்தர்களின் கொடிச்சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் வரலாற்று சிறப்பை இங்குள்ள கல்வெட்டுகளே பறைசாற்றி நிற்கிறது. அது மட்டுமன்றி தமிழ்மூதாட்டி அவ்வைக்கு ஆளுயர சிலை அமைக்கப்பெற்ற முதல் கோயில் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரிமன்னரின் மகள்கள் அங்கவை மற்றும் சங்கவை. தாய், தந்தையை இழந்து நின்ற இவர்களை அவ்வையார் இங்கு அழைத்து வந்தார்.
பின்னர் மூவேந்தர்கள் முன்னிலையில் அவர்களை திருக்கோயிலூர் மன்னருக்கு திருமணம் செய்து வைத்தார் என்ற தகவல்களும் உள்ளது. பாரியின் மகள்களுக்கு அவ்வை திருமணம் செய்து வைத்த பரிசுத்த தலம் என்பதால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் திருமணத்தடை நீங்கும். இல்லறம் நல்லறமாக ஜொலிக்கும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஆண்டாண்டு காலமாய் தொடரும் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் நெய்தீபமேற்றியும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர். அதே போல் ஆண்டு தோறும் சித்ராபவுர்ணமி நாளில் இங்கு நடக்கும் தேரோட்டமும் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த விழாவில் அலையென பக்தர்கள் திரண்டு இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர். இப்படி பழம்பெருமை கொண்ட கரபுரநாதர் திருக்கோயில், அடுத்த சில மாதங்களில் கும்பாபிஷேக விழா காண்பதற்கு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘கரபுரநாதர் கோயிலில் ரூ50லட்சம் மதிப்பீட்டில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. கோயிலின் ராஜகோபுரம் முழுவண்ணம் பூசப்பட்டு வருகிறது. இதேபோல் சூரியன், முருகன், பஞ்சலிங்கம், அம்பாள் என்று அனைத்து கோபுர விமானங்களும் பழுதுபார்த்து புதுப்பிக்கப்படுகிறது.
ஆயிரமாண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு இதுவரை முறையான நுழைவுவாயில் இல்லை. தற்போது புதிய நுழைவு வாயில் அமைப்பதற்கான வரைபடம் தயாரித்து ஆணையரின் அனுமதிக்கு அனுப்பியுள்ளோம். தற்போதைய நிலவரப்படி கோயில் கும்பாபிஷேக பணிகள் 30சதவீதம் நடந்து முடிந்துள்ளது. ஓராண்டுக்குள் பணிகளை முழுமையாக முடித்து கும்பாபிஷேக விழா நடத்த வாய்ப்புள்ளது,’’ என்றனர்.
பஞ்சபாண்டவர்கள் ஒன்றுகூடிய கோயில்
காவிரி ஆற்றுக்கும், அதன் கிளை நதியான திருமணி முத்தாற்றுக்கும் இடையே உள்ள செழிப்பான பகுதிகளில் ஏராளமான பெருந்ெதய்வ, சிறுதெய்வ கோயில்களும் உள்ளது. இதில் சுகவனேஸ்வரர் கோயில், கரபுரநாதர் கோயில், வீரட்டீஸ்வரர் ேகாயில், பீமேஸ்வரர் கோயில், எயிலிநாதர் கோயில்கள் ஈசனை பிரதிஷ்டை செய்து, பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட கோயில்கள் என்பது புராணங்கள் கூறும் வரலாறு. இவை பஞ்சபூத தலங்களாகவும் போற்றப்படுகிறது. இதே போல் பஞ்சபாண்டவர்கள் 5பேரும் ஒன்று கூடி வழிபட்ட பெருமையும் கரபுரநாதர் கோயிலுக்கு உள்ளது.