செகந்திராபாத்: தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து நேற்றிரவு 8 மணி வரை கூட முற்றிலுமாக கட்டுப்பாட்டில் வரவில்லை. இதில் 4 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர் தீ விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
செகந்திராபாத் நல்லகுட்டா டெக்கான் நைட் வேர் ஸ்போர்ட்ஸ் ஷாப்பிங் மாலில் நேற்று காலை 11 மணிக்கு திடீரெனதீப்பற்றியது. கீழ் தளத்தில் தீ பரவியதால், மக்கள் பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் தீ மளமளவென மேல் மாடிக்கும் பரவியது. இதனால், கீழே இறங்கி வந்து கொண்டிருந்த 4 பேர் பயந்து போய் 5-வது மாடிக்கு ஓடினர்.
தகவல் அறிந்து முதலில் 6 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும், 5-வது மாடியில் சிக்கிக் கொண்ட 4 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டு காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஒருவரின் நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், முதல் மாடியில் சிக்கிய சிலரின் நிலை தெரியவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தீ கொழுந்து விட்டு எரிவதால் அருகில் யாரும் செல்ல முடியவில்லை. அந்த கட்டிடத்தில் இருந்து பயங்கரமாக வெடிக்கும் சத்தங்களும் கேட்டன.
இதனால், தீயை அணைக்க ஹைதராபாத் நகரில் உள்ள மேலும் சில தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 22 வாகனங்கள் மூலம் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், இரவு 8 மணி வரை கூட தீயை முற்றிலுமாக அணைக்க முடியவில்லை.
மாலில் துணிகள், ரெக்ஸின், ஸ்போர்ட்ஸ் உபகரணங்கள் இருந்ததால், தீ காற்றில் மேலும் மேலும் பரவுவதாக தெரிய வந்தது. மேலும் மாலில் பல குடோன்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகவும் அதனால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவும் தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்தது. அத்துடன் ஷாப்பிங் மால் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து கட்டிடத்தை சுற்றி உள்ள கடைகள், வீடுகள் காலி செய்யப்பட்டன.