சென்னையில் கண்டெய்னர் தூக்கும் இரும்பு கொக்கி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (45). இவர் சடையங்குப்பத்தில் உள்ள கண்டெய்னர் சரக்கு பெட்டகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் நேற்று முன்தினம் லாரியில் இருந்து கண்டெய்னர் பெட்டியை இறக்குவதற்காக ராட்சத கிரேனின் இரும்பு சங்கிலியை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக சங்கிலியில் இருந்த இரும்பு கொக்கி திடீரென அறுந்து சுரேஷ் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சுரேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.