பொன்னேரி: பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட கான்கிரீட் மின்கம்பங்கள் தற்போது பல்வேறு இடங்களில் உருக்குலைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.
மேலும், பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் பழுதான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி மின்தடையும் மின் அதிர்வுகளும் தீ விபத்துகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதில் ஒருசில சேதமான மின்கம்பங்கள் முறிந்து சாலையிலேயே பரிதாப நிலையில் கிடக்கின்றன.
எனவே, மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் சேதமான மின்கம்பங்களை உடனடியாக மாற்றி சீரமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 23ம் தேதி திமுக கவுன்சிலர்கள் தலைமையில் மீஞ்சூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.