பொங்கல் என்றாலே வீரத்திற்கு அடையாளமான ஜல்லிக்கட்டு எல்லோருக்கும் நினைவில் வரும். ஜல்லிக்கட்டுனா எப்போதும் காளைய அடக்குவதைதான் நாம பார்த்திருப்போம். ஆனா சேலத்தில் ஒரு சில குறிப்பிட்ட கிராமத்தில் வங்கா நரியை பிடித்து வந்து ஓடவிட்டு பிடிக்கும் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, `சேலம்னாலே வங்காநரி ஜல்லிக்கட்டு தான் பேமஸ்’ என்கின்றனர் சேலத்தை சேர்ந்த மக்கள். அப்படி சமீபத்தில் நடந்து முடிந்த பொங்கல் விழாவை முன்னிட்டு சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு நடைப்பெற்றுள்ளதாம். `நரி முகத்தில் முழிச்சா நல்ல யோகம் வரும்’ என்பதை நம்பி இன்னும் சில கிராமங்களில் காணும் பொங்கலன்று வங்காநரியை காட்டில் இருந்து பிடித்துவந்து ஊருக்கு நல்ல விமோச்சனம் கிடைக்கணும்னு வேண்டி ஊர்வலமாக அழைத்து வருகின்றனர்.

அவ்வாறு அழைத்துவரும் நரியை ஊருக்கு மத்தியில் ஓடவிட்டு அதனை இளைஞர்கள் பிடிப்பது என்பது ஒரு போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இளைஞர்கள் வருடாவருடம் போட்டிக்கு முன்பே தங்களை தயார்படுத்திக்கொண்டு களத்திற்கு வருவதால், இதனை ஜல்லிக்கட்டு என்றே அழைத்து வருகின்றனர். இதுப்போன்று சிறிய விலங்கினங்களை கொடுமைப்படுத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒவ்வொரு ஆண்டும் அரசு தரப்பில் நினைவுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் இந்த வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைப்பெற்று வருகிறது.
அந்தவகையில் நேற்று முதல் நாள் வாழப்பாடி அருகே கொட்டவாடி கிராமத்தில், வங்காநரியை பிடித்துவந்து வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவந்து ஊர் மைய பகுதியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோயிலை சுற்றிவந்து வழிபாடு செய்துள்ளனர் அந்த கிராமத்து மக்கள். இந்த தகவல் அறிந்து வாழப்பாடி வனத்துறை அதிகாரி துரை முருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வங்கா நரியை மீட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வனத்துறை எச்சரிக்கையை மீறி நேற்று சின்னம்மநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் நரியைப்பிடித்து வந்துள்ளனர். பின்னர் கொட்டாவாடியில் வழக்கு பதிவு செய்திருப்பதை அறிந்த கிராமமக்கள் வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த 2 கிராமங்கள் மீதும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.