`தரமற்ற உணவு, அதிக விலை!'- ஹைவே ஹோட்டலில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை; அமைச்சர் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இயங்கிவரும் `வேல்ஸ்’ பயணவழி உணவகத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில், அங்கு தரமற்ற உணவு, கூடுதல் விலைக்கு திண்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அந்த உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

ஹைவே ஹோட்டல்களில் சோதனை

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “சமீபகாலமாக, அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பயணவழி உணவகங்கள், கடைகளில் தரமற்ற உணவுகள், கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் பராமரிக்கப்படுவதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு புகார்கள் வந்தன.

எனவே, அமைச்சரின் உத்தரவுப்படி, போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கடந்த இரண்டு நாள்களாக சாலையோர உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவ்வாறு நேற்று (19.01.2023) ஆய்வு மேற்கொள்ளும்போது, விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ‘வேல்ஸ்’ பயணவழி உணவகத்தில் பயணிகளுக்கு சுகாதாரமற்ற முறையில், தரமற்ற உணவு, கூடுதல் விலைக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டுவந்தது கண்டறியப்பட்டது.

அமைச்சர் சிவசங்கர்

அதனடிப்படையில், வேல்ஸ் பயணவழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உரிமம் ரத்துசெய்யப்படுகிறது. எதிர்வரும் காலங்களில், அங்கீகரிக்கப்பட்ட பிற சாலையோர உணவகங்களிலும் ஆய்வுசெய்யப்பட்டு குறைகள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.