புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வியடைந்த வினேஷ் போகத்தை, மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷன் கடுமையாக தொந்தரவு செய்ததாகவும், இதனால், அவர் தற்கொலைக்கு முயன்றதாக, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட ஒட்டுமொத்த மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தவிர இந்தியாவில் உள்ள அனைத்து டபிள்யு.எப்.ஐ., அமைப்பையும் கலைத்து விட்டு, புதிய கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்களின் போராட்டம் 3வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தால், தங்கள் உயிருக்கு அச்சப்படுகிறோம் என தெரிவித்துள்ள வீராங்கனைகள், பிரிஜ் பூஷன் சரண் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், தன் மீதான புகாரை மீண்டும் மறுத்துள்ள பிரிஜ் பூஷன், லக்னோவில் நிருபர்களிடம் கூறியதாவது: நான் பேசினால், சுனாமி ஏற்படும். நான் யாரின் உதவியினாலும், இந்த இடத்திற்கு வரவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டவன். மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தில் பின்னணியில் உள்ள அரசியல் சதியை அம்பலப்படுத்துவேன். எந்தக்காரணம் கொண்டும் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை எனக்கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், இந்த விவகாரம் குறித்து மீடியாக்களிடம் எதுவும் கூற வேண்டாம் என பிரிஜ் பூஷனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், பிரச்னை மேலும் பெரிதாகும் என எச்சரித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேற்று சந்தித்து பேசிய அனுராக் தாகூர், இன்றும் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
கடிதம்

இதனிடையே, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடி உஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் தோல்வியடைந்தார். இதனால், அவரை, மன ரீதியாக துன்புறுத்தியதுடன், பிரிஜ் பூஷன் கடுமையாக தொந்தரவும் செய்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்யும் அளவுக்கு வந்தார். இது தங்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்னை.
பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும். பல இளம் வீராங்கனைகளும், பாலியல் துன்புறுத்தலை சந்தித்துள்ளதாக தங்களிடம் புகார் கூறியுள்ளனர். மல்யுத்த சங்கத்தை கலைப்பதுடன், அந்த சங்கத்தின் தலைவராக இருக்கும் பிரிஜ் பூஷனை பதவியில் இருந்து நீக்க வேண்டும். வீரர்களுடன் ஆலோசனை செய்து புதிய சங்கத்தை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்த கடிதத்தில், இந்த கடிதத்தில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி தாகியா, பஜ்ரங் புனியா, ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வினேஷ் போகத், தீபக் புனியா ஆகியோரும் கையெழுத்து போட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்