கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பெர்னாட். இவர் திருப்பதி சாரம் பகுதியில் பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல், சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிருக்குப் புறப்படுவதற்குத் தயாரானார்.
அப்போது, போலீஸ் சீருடையில் இருசக்கரவாகனத்தில் கடையின் முன்பு வந்த ஒரு நபர், தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீந்து விட்டதாக தெரிவித்தார். அதன் பின்னர், பெர்னாட்டினுடைய இருசக்கர வாகனத்தை தந்தால் பெட்ரோல் வாங்கி வந்த பிறகு தனது வண்டியை எடுத்து செல்வதாக தெரிவித்தார்.
இதை உண்மை என்று நம்பிய பெர்னாட் தனது இருசக்கர வாகனத்தை அந்த வாலிபரிடம் கொடுத்து அனுப்பினார். பலமணி நேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெர்னாட் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெர்னாட் கடை முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இருசக்கர வாகனம் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பது தெரிய வந்தது.
இந்த இருசக்கர வாகனம் பழுதானதால் பெர்னாட்டின் இருசக்கர வாகனத்தை அந்த நபர் வாங்கி சென்றிருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காட்சிகளையும் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் சமீப காலமாகவே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வடசேரி மட்டுமின்றி கோட்டார், மீனாட்சிபுரம் பகுதிகளிலும் கடைகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது.
கொள்ளையர்கள் தொடர்ந்து இந்த கைவரிசையில் ஈடுபட்டு வருகிறார்கள். கொள்ளையர்களைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.