முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. sdat.tn.gov.in இணையதளம் மூலம் லட்சக்கணக்கானோர், ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி 5 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி ஆகும். சிலம்பம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் நடைபெற உள்ளது.
முதல்முறையாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்கும் தேதியை ஜன.23க்கு விளையாட்டு ஆணையம் நீட்டித்துள்ளது. 2022-2023ம் ஆண்டுக்குரிய மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க ஆன்லைன் மூலமாக வீரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை செய்யப்பட்டது. அதில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள விளையாட்டு ஆணைய அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்களை தவிர மற்ற 3 பிரிவினருக்கு நடத்தப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 17 என இருந்ததை ஜனவரி 23 ஆக மாற்றியுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
newstm.in