மூன்று மொழிகளில் குழப்பிய அண்ணாமலை: தர்மபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? கர்நாடக பாஜகவில் அலறல்!

தமிழ்நாடு அரசியலில் சர்ச்சைப் பேச்சுக்கும், குழப்ப பேச்சுக்கும் அடையாளமாக மாறியுள்ளார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் பாஜகவை எப்படியாவது கால் ஊண்ற வைத்துவிட வேண்டும் தாமரையை எப்படியாவது மலர வைத்துவிட வேண்டும் என்று சில பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றுக்கெல்லாம் என்ன பலன் கிடைக்கிறது என்று பார்த்தால் சாண் எற முழம் சறுக்கும் கதை தான் நடப்பதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

“ஆவேசமாக பேசினால் தொண்டர்கள் சில்லறையை சிதறவிடுவார்கள் என்று அவர் புரிந்து கொண்டதெல்லாம் சரிதான் ஆனால் அவரோ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும், நேர்காணலிலும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை, மாற்றி மாற்றி பேசி யூடியூப் ட்ரோல் வீடியோக்களின் கண்டண்ட்டாக மாறிவிடுகிறார்” என்கிறார்கள்.

பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் அண்ணாமலை மூன்று மொழிகளில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 10ம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ 6E-7339 விமானம் காலை 10.05 மணிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பயணித்தனர்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் அவசரக்கால கதவு திறக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பயணிகள் கீழே இறக்கப்பட்டு, விமானத்தில் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு 142 நிமிடங்கள் தாமதமாக அந்த விமானம் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தவறுதலாக அவசரகால வழியை திறந்ததாலேயே இப்பிரச்சினை ஏற்பட்டதாகவும், நல் வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்தது பாரதிய ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா என்றும் அவர் தவறுதலாக அவசரகால கதவை திறந்ததற்கு விமானியிடமும் சிப்பந்திகளிடமும் தேஜஸ்வியே மன்னிப்பும் கேட்டுக்கொண்டதாக நினைக்கிறேன் என்றும் கூறினார்.

சம்மந்தப்பட்ட பாஜக எம்.பியே இந்த தவறை செய்ததாகவும் மன்னிப்பு கேட்டதாகவும் பாஜகவைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் உறுதிபடுத்திய நிலையில் இந்த விவகாரத்தை அண்ணாமலை புதிய பாதையில் திருப்பினார்.

கர்நாடகாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தேஜஸ்வி சூர்யா படித்தவர். விமானத்தின் அவசர கதவை திறக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அதனை அவர் திறக்கவும் இல்லை. அவர் தனது கையை அந்தக் கதவின் மேல் வைத்திருந்தார். அப்போது கதவில் இருந்த இடைவெளியை பார்த்ததும் விமானப் பணியாளர்களின் கவனத்துக்கு கொண்டு

சென்றார். இதை நானும் பார்த்தேன். அவர் தவறு செய்யவில்லை என்றாலும் அவர் எம்.பி என்ற பொறுப்பில் இருப்பதால் மன்னிப்பு கோரினார்” என்று மன்னிப்புக்கு ஒரு காரணமும் கற்பித்து அண்ணாமலை கூறினார்.

தமிழ், கன்னடம், ஆங்கிலம் என வெவ்வேறு மொழிகளில் இதை பேட்டியாக அளித்த நிலையில் தேசிய அளவில் இந்த சர்ச்சை பரவி வருகிறது.

சம்பவம் நடைபெற்றது உண்மை. அதை செய்தவர் ஒத்துக்கொண்டுள்ளார், அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார். ஒன்றிய அமைச்சரும் உறுதிபடுத்தியுள்ளார். இப்படியிருக்க அண்ணாமலை ஏன் வித்தியாசமாக இந்த விவாகரத்தை திசை திருப்புகிறார் என்று கேள்விகள் எழுந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரியளவில் வாக்கு வங்கி இல்லாத நிலையில் அதை பெறுவதற்கு அண்ணாமலை ஆவேசமாக முன்னுக்கிப் பின் முரணாக எதையாவது பேசலாம். ஆனால் கர்நாடகா போன்ற பாஜக செல்வாக்குடன் இருக்கும் பகுதிகளில் இவ்வாறு பேசி அங்குள்ள வாக்கு வங்கியிலும் ஓட்டை விழ வைத்துவிடக்கூடாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.