'ரன் பேபி ரன்' – வெளியீட்டுக்கு முன்பே பட்ஜெட் பணம் வந்துவிட்டது: ஆர்ஜே பாலாஜி தகவல்

வீட்ல விசேஷம் படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி நடித்து வெளிவர இருக்கிற படம் ரன் பேபி ரன். ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் பிரசன்னா, ஜோ மல்லூரி, தமிழ், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். மலையாள இயக்குனர் ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது: வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகின்றன. இந்த படத்திற்கு பிறகு, நமக்கு வேறு என்ன வரும் என்று தெரிந்து கொள்ள நல்ல இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படி தேர்வு செய்த படம்தான் இது.

இதில் எனது வழக்கமான காமெடி இருக்காது. சீரியசான த்ரில்லர் படம். சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறேன். ஆனாலும் அது யதார்த்தமாக இருக்கும். ஒரு வங்கியில் பணியாற்றும் சராசரி மனிதன். அவன் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் மாற்றம் இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு திரில்லராக இருக்கும். இறுதிவரை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். ஊடகங்கள் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும். தயாரிப்பாளரின் லாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன். தியேட்டருக்கு வரும் முன்பே மற்ற உரிமங்கள் விற்ற வகையில் இப்போதே இந்த படம் செலவு செய்த பட்ஜெட்டை எடுத்து விட்டது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.